சேலம் மாநகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடை - மாற்று இடம் அறிவிப்பு

சேலம் மாநகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு மாற்று இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-03 08:21 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சி சார்பில் ஓமலூர் சாலையில் உள்ள அரபிக்கல்லூரி அருகில் தற்காலிகமாக இறைச்சி, மீன் கடைகள் வைக்க இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை ஆணையாளர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் செயல்படும் இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உருவாகிறது. இதை கருத்தில் கொண்டு அரசு, மாநகரப் பகுதிகளில் செயல்படும் இறைச்சி, மீன் கடைகளை மாநகரின் எல்லைப் பகுதிகளில் மட்டுமே நடத்தி கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் இறைச்சி, மீன் கடைகள் 4-ந்தேதி (நாளை) முதல் மறு உத்தரவு வரும் வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகர் பகுதிகளுக்குள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகள் நடத்திக்கொள்ள ஓமலூர் பிரதான சாலையிலுள்ள அரபிக்கல்லூரி அருகில் மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இறைச்சி மற்றும் மீன் விற்பனையாளர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு பொதுமக்கள் நிற்பதற்கு வசதியாக சமூக இடைவெளி ஏற்படுத்தி வியாபாரம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சமூக இடைவெளியில் நின்று, முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே இறைச்சி, மீன் வழங்கப்படும் என அறிவுறுத்த வேண்டும். அரசு உத்தரவை மீறி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்