வெளிமாநிலத்தவர், ரேஷன்கார்டு இல்லாத 1000 பேருக்கு சொந்த செலவில் உணவு பொருட்கள் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளிகள், வெளி மாநிலத்தவர், ரேஷன்கார்டு இல்லாதவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்.

Update: 2020-04-03 22:15 GMT
சிவகாசி,

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என கண்டறியப்பட்ட 1000 பேருக்கு தேவையான பலசரக்கு பொருட்களை தனது சொந்த செலவில் வழங்க முடிவு செய்தார். அதன்படி அரிசி, புளி, பருப்பு, கொண்டைக்கடலை, எண்ணெய், மிளகு, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், சாம்பார்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், பெருங்காயம், உப்பு உள்ளிட்ட பொருட்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் வினியோகம் செய்ய வசதியாக கலெக்டரிடம் வழங்கினார்.

சிவகாசி தாலுகா அலுவலகம் வந்திருந்த ஒரு சிலருக்கு இந்த பொருட்களை அமைச்சர் வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேஷ், ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் லயன்லட்சுமிநாராயணன், கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைதொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படக்கூடாது என்ற எண்ணத்தில் எனது சொந்த நிதி ரூ.4 லட்சம் செலவில் 1000 பேருக்கு அரிசி மற்றும் 14 சமையல் பொருட்கள் அடங் கிய பையை கொடுத்துள்ளேன். முதல் கட்டமாக தற்போது 1000 பேருக்கு கொடுத்துள்ளேன். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் நபர்களுக்கும் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை இந்தியாவில் இருந்து விரட்ட பிரதமர் நரேந்திரமோடியும், தமிழகத்தில் இருந்து விரட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்துக்கு கந்தகபூமி என்ற பெயர் உள்ளது. சிலர் இந்த பகுதி மக்களை தாக்காது என்று கூறி வருகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. பாதுகாப்பு கவசம் இல்லாமல் இருப்பவர்களை கொரோனா வைரஸ் கண்டிப்பாக பாதிக்கும். அதனால் வெளியே வராமல் வீட்டில் தங்கி இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்