வதந்திகளை நம்ப வேண்டாம்: கோழி இறைச்சியை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

வதந்திகளை நம்ப வேண்டாம் கோழி இறைச்சியை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-03 22:45 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோழி இறைச்சி, முட்டை மற்றும் இதர கோழி உணவு பொருட்கள் சாப்பிடுவதால் கொரோனா தொற்று பரவக்கூடும் என பொதுமக்களிடம் ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட தயக்கம் காட்டுகிறார்கள். 

கொரோனா வைரஸ் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு சுவாசக்குழாய் மூலம் தும்மல், சளி போன்றவற்றில் வெளிவரும் நீர்த்துளிகள் மற்றும் இவைகள் படர்ந்துள்ள பொருட்களை தொடுவதால் மட்டுமே பெரும்பாலும் பரவுகிறது. முட்டை மற்றும் கோழி இறைச்சியானது மிகவும் மலிவான புரத உணவாகும். அவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் மனிதனுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் தேவையான காலக்கட்டமாகும்.

எனவே பொதுமக்கள் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதாக கூறும் தவறான வதந்திகளை நம்ப வேண்டாம். கோழி இறைச்சியை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது. அதற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே தயக்கமில்லாமல் அனைவரும் முட்டை மற்றும் கோழி இறைச்சியை சாப்பிடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்