சேலம் மாநகராட்சி சார்பில் ரூ.100 மதிப்பிலான காய்கறி தொகுப்பு; வீடு, வீடாக வழங்க ஏற்பாடு - வாகன அங்காடியை ஆணையாளர் தொடங்கி வைத்தார்

சேலம் மாநகராட்சி சார்பில் ரூ.100 மதிப்பிலான காய்கறி தொகுப்பு வீடு, வீடாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாகன அங்காடியை ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

Update: 2020-04-03 22:15 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சி சார்பில் வீடு, வீடாக சென்று காய்கறி விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான வாகன அங்காடியை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாநகரப் பகுதிகளிலுள்ள தினசரி மற்றும் உழவர் சந்தைகளில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் விசாலமான பகுதிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டு கடைகளில் சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாநகரப் பகுதிகளில் செயல்படும் உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக வீடு, வீடாக காய்கறிகளை விற்பனை செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ரூ.100 மதிப்பிலான காய்கறி தொகுப்பு வீடு, வீடாக வாகனங்களில் சென்று வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் விற்பனை செய்யப்படும் காய்கறி பையில் தக்காளி, பெரிய வெங்காயம், பீன்ஸ், கேரட், முள்ளங்கி, முருங்கைக்காய், நாட்டு கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா என 12 வகையான பொருட்கள் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக காய்கறிகள் தேவைப்படும் பொதுமக்கள் 70103 05699, 90915 80517 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொது வெளிகளில் வருவதை தவிர்த்து விடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் அசோகன், உதவி ஆணையாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்