மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தபோது நாமக்கல் டிப்ளமோ என்ஜினீயர் திடீர் சாவு - சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்பட்டது

மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தபோது நாமக்கல்லை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயர் திடீரென இறந்தார். அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

Update: 2020-04-03 22:00 GMT
பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் லோகேஷ் (வயது 23). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் டிப்ளமோ படித்துவிட்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள மவுலி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அவர் வேலை பார்த்த நிறுவனம் மூடப்பட்டது. இதன் காரணமாக லோகேஷ் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 31-ந் தேதி தனது நண்பர்களுடன் ஊருக்கு கிளம்பிய அவர், ரெயில் மற்றும் பஸ்கள் ஓடாததால் சரக்கு லாரிகளில் ஏறி வந்தார். அவ்வாறு பல்வேறு லாரிகளில் ஏறி நண்பர்களுடன் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு வந்தார்.

இதையடுத்து லாரியில் இருந்து இறங்கிய அவர்கள் சிறிது தூரம் நடந்து சென்றனர். அப்போது மாரேட்பள்ளி என்ற பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் லோகேஷ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை அங்குள்ள பாதுகாப்பு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதற்கிடையே மண்டபத்தில் தங்கியிருந்த லோகேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார் லோகேசை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் லோகேஷ் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தனி ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு லோகேசின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கரைய வைத்தது.

மேலும் லோகேசின் உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கலெக்டர் மெகராஜ், லோகேசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். வெளி மாநிலத்தில் இருந்து ஊர் திரும்பிய போது டிப்ளமோ என்ஜினீயர் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்