தடையை மீறி வெளியே சென்றவர்களிடம் இருந்து ஒரே நாளில் 400 வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் தடையை மீறி வெளியே சென்றவர்களிடம் இருந்து ஒரே நாளில் 400 வாகனங்கள் பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2020-04-04 05:19 GMT
கோவை,

கோவையில் தடையை மீறி வெளியே செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளியே செல்பவர்கள் கைது செய்யப்பட்டு வருவதுடன், அவர்கள் செல்லும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியே செல்லக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் தடையை மீறி வெளியே சென்ற 526 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 400 இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து உள்ளனர்.எனவே தடையை மீறி வெளியே செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் நேற்று போலீசாருடன் பேரிடர் மீட்பு படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளியே சென்ற பெண்கள் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் தடையை மீறி வெளியே சென்றவர்களிடம் இருந்து ஒரே நாளில் 400 வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலும் இளைஞர்கள் ஓட்டி வந்த வாகனங்கள்தான். ஏன் வெளியே செல்கிறீர்கள் என்று இளைஞர்களிடம் கேட்டால் அவர்கள் கூறும் பதில் நூதனமாக இருக்கிறது.

ஒரு இளைஞர், எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கழிவறை பூட்டி இருக்கிறது. எனவே கழிவறை செல்ல வெளியே வந்தேன் என்று பதில் கூறினார். பெரும்பாலானவர்கள் கடைக்கு செல்கிறேன் என்றுதான் கூறுகிறார்கள். வீட்டின் அருகிலேயே மளிகை கடைகள் இருக்கும். ஆனால் அதை தாண்டி மெயின் ரோட்டிற்கு வர என்ன காரணம் என்றுதான் தெரியவில்லை. தற்போது பெண்களும் வெளியே வரத்தொடங்கி உள்ளனர். எனவே காரணம் இல்லாமல் வெளியே சுற்றும் யாராக இருந்தாலும் சரி அவர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்கள் செல்லும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்