தமிழக அரசு 2-வது கட்ட நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை

தமிழக அரசு 2-வது கட்ட நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளாது.

Update: 2020-04-04 20:30 GMT
சென்னை, 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்கள் உள்பட அனைத்துப் பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும், விலை உயர்வினை கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்களும், நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி அறிவித்த 5 கிலோ அரிசி மற்றும் பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், தமிழக அரசு 2-வது கட்ட நிவாரண உதவிகளை உடனடியாக அறிவிக்க வேண்டும். பிரதமர் அறிவித்த அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களையும் வழங்கிட வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் அவசர மற்றும் அத்தியாவசிய சிகிச்சைகளை அளிப்பதை உறுதிபடுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் உரை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது. பிரதமர் ஏற்கனவே கையை தட்டச்சொன்னார், இப்போது விளக்கை அணைக்க சொல்கிறார், நாளை என்ன சொல்வாரோ? அவருக்கே வெளிச்சம்.

அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு பிரதமரின் உரை ஏமாற்றம் அளிப்பது மட்டுமல்ல நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்