விருதுநகர், சிவகாசியில் வீடு தேடிச்சென்று காய்கறி விற்பனை

விருதுநகர் மற்றும் சிவகாசியில் வீடு தேடிச்சென்று காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2020-04-04 21:45 GMT
விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நகராட்சி பணியாளர்களை கொண்டு வேன்கள் மூலம் 11 வகை காய்கறிகள் அடங்கிய காய்கறி பையை வீடு வீடாக சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. ½ கிலோ வெங்காயம், 1 கிலோ தக்காளி மற்றும் 9 வகையான காய்கறிகள் தலா ¼ கிலோ ஆகியவை அடங்கிய காய்கறி பை ரூ.100-க்கு வினியோகம் செய்யப்படுவதாக தெரிவித்த நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி நகர் மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சிவகாசி நகரில் 5 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைத்து காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி விற்கப்படுகிறது. இதனை வாங்க அதிக அளவில் மார்க்கெட்டுக்கு கூட்டம் வந்தது. அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது 4 வாகனங்களில் காய்கறிகளை கொண்டு சென்று வீடுகளை தேடி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். ஓட்டுனர் மற்றும் விற்பனையாளர்கள் இந்த வாகனத்தில் சென்று மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், காய்கறி கடைகள் இல்லாத பகுதிகளிலும் விற்பனை செய்து வருகிறார்கள். காலை 6 மணி முதல் 10 மணி வரை இந்த விற்பனை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரவணன்மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர். இது குறித்து நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இது பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளதால் மேலும் 10 வாகனங்களில் காய்கறிகளை கொண்டு சென்று வீடுகளில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து மக்களுக்காக நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து கொரோனா பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றார்.

மேலும் செய்திகள்