எனக்கும், மந்திரி ஸ்ரீராமுலுவுக்கும் இடைேய மோதலா? வதந்தி பரப்புவோர் கொரோனாவைவிட ஆபத்தானவர்கள் - மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் அறிக்கை

தனக்கும், மந்திரி ஸ்ரீராமுலுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு பதில் அளித்துள்ள மருத்துவ கல்வி மந்திரி சுதாகர்,வதந்திபரப்புபவர்கள் கொரோனாவை விட ஆபத்தானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-04 23:38 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் பணியில் மாநில அரசின் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ கல்வித்துறை இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் இடைேய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா விவகாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மந்திரி சுதாகரிடம் முதல்-மந்திரி எடியூரப்பா ஒப்படைத்தார்.

தனது துறைக்கு கீழ் வரும் இந்த விவகாரத்தை மருத்துவ கல்வித்துறை மந்திரியிடம் ஒப்படைத்ததை ஸ்ரீராமுலுவால் ஏற்க முடியவில்லை. இதனால் மந்திரிகள் சுதாகர், ஸ்ரீராமலு இடையே பனிப்போர் வலுத்து வந்தது. இருவரும் கொரோனா குறித்து தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வெளியிட்டு வந்தனர். இந்த தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருந்ததால் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொரோனா குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கும் பொறுப்பு பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாரிடம் முதல்-மந்திரி எடியூரப்பா ஒப்படைத்துள்ளார்.

உலகம் சிக்கியுள்ளது

இந்த நிலையில் தனக்கும், சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு மீறிய நெருக்கடியில் உலகம் சிக்கியுள்ளது. நானும், எனது சகோதரரை போன்றவரான சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவும் கொரோனாவை ஒழிக்கவும், மக்களின் நலனை காக்கவும் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இதில் விளம்பரம் தேடும் அவசியம் என்ன உள்ளது?.

ஆபத்தானவர்கள்

நாங்கள் இருவரும் மக்கள் மத்தியில் இருந்து, மக்கள் பிரதிநிதிகளாக வந்துள்ளோம். மக்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டே, எங்களுக்கு உயர்ந்த பரிசு. இதில் விளம்பரம் என்ற பேச்சு எங்கு உள்ளது?. அதுவும் மக்கள் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் எங்களிடையே பகையை ஏற்படுத்தி வதந்திகளை பரப்பும் மனநிலை கொண்டவர்கள் கொரோனாவை விட ஆபத்தானவர்கள்.

நான் அடிப்படையில் ஒரு டாக்டர். அதைவிட மக்கள் சேவையில் என்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளவன். இத்தகைய விமர்சனங்களை கண்டு பயந்து கடமையில் இருந்து விலகுபவன் நான் அல்ல. ஒவ்வொரு விமர்சனமும் என்னை மேலும் பலம் வாய்ந்தவனாக ஆக்குகிறது. இது எனக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. இன்னும் சிறப்பாக பணியாற்ற விமர்சனங்கள் ஊக்குவிக்கின்றன. நமது ஒற்றுமையை கொரோனாவை ஒழிப்பதில் காட்டுவோம். பொய் செய்திகளை பரப்பு பவர்களுக்கு அவரவர் விரும்பும் கடவுள், நல்ல அறிவை கொடுக்கட்டும் என்று வேண்டுகிறேன்.

இவ்வாறு மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்