கொரோனா அச்சமின்றி அலட்சியப்போக்கு: அத்தியாவசிய பொருட்கள் வாங்க குடும்பத்துடன் வலம் வரும் மக்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய அச்சமின்றி அலட்சியப்போக்குடன், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சிலர் குடும்பத்துடன் வெளியே வருகின்றனர்.

Update: 2020-04-05 05:24 GMT
திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேநேரம் காய்கறி, மளிகை, பால், மருந்து கடைகள் மட்டும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே வெளியே வரலாம். ஆனால், தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி திண்டுக்கல் நகரில் பொதுமக்களின் வசதிக்காக 6 இடங்களில் காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் மதியம் 2 மணி வரை காய்கறி சந்தைகள், மளிகை கடைகள் செயல்படுகின்றன. மேலும் ஊரடங்கை அமல்படுத்துவதற்காக அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவை ஒருசிலர் மட்டுமே கடைபிடிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் ஊரடங்கை கடைபிடிப்பதில்லை. ஒருசில பகுதிகளில் காலை 6 மணிக்கே குடும்பத்துடன் காய்கறிகளை வாங்குவதற்கு வந்து விடுகின்றனர். இன்னும் சிலர் குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் அழைத்து வருகின்றனர். போலீசார் கடுமையாக எச்சரிப்பதோடு, தினமும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.

எனினும், கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் இல்லாமல், ஊரடங்கு உத்தரவையும் மதிக்காமல் அலட்சியப்போக்குடன் சுற்றித்திரிவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இது போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். அதேநேரம் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க, தனிமைப்படுத்தி கொள்வதே பாதுகாப்பு ஆகும்.

இதை உணர்ந்து மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வீட்டுக்கு ஒருவர் மட்டும் வெளியே வருவதே சிறந்தது. 

மேலும் செய்திகள்