உணவின்றி தவிக்கும் கால்நடைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவின்றி தவிக்கும் கால்நடைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

Update: 2020-04-05 22:30 GMT
தூத்துக்குடி, 

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தீவிரமாகாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பல நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களின் நன்மை கருதி போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டு உள்ளன.

ஆனால் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தடையின்றி நடைபெறவும், கால்நடை, கோழி, மீன், முட்டை, இறைச்சி, கால்நடை மற்றும் கோழித்தீவனம், கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்லவும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

உணவின்றி சிரமப்படும் நாய்கள் மற்றும் கால்நடைகளுக்கு உணவு அளிக்கவும், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும் ஆதரவற்ற கால்நடைகள் மற்றும் பிராணிகள் நலன் பேணுதல் குறித்த தகவல்களை உடனுக்குடன் கவனிக்க பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-5880 மற்றும் 1962 ஆகியவற்றில் தகவல்களை தெரிவிக்கலாம்.

இடையூறு

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கண்ட பொருட்கள் கொண்டு செல்வதில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனரை 94450 01124 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்