நெல்லை மாநகர பகுதியில் தடை உத்தரவை மீறிய 893 பேர் மீது வழக்கு - 130 வாகனங்கள் பறிமுதல்

நெல்லை மாநகர பகுதியில் தடை உத்தரவை மீறிய 893 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Update: 2020-04-05 22:15 GMT
நெல்லை, 

இதுகுறித்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் நேற்று மாலை வண்ணார்பேட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்த சட்டம் கடுமையாக்கப்பட்டு உள்ளது. அதன்படி கார்களில் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. டாக்டர்கள், அரசு ஊழியர்கள் மட்டும் செல்லலாம். அதற்கான அடையாள அட்டையை காட்ட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கள் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் மட்டும் வாங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள், பால், மருந்து கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்து வைத்து இருக்க வேண்டும். அதற்கு மேல் திறந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லை மாநகர பகுதியை சுற்றி 23 சோதனை சாவடிகள் உள்ளன. அந்த வழியாக வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

இதுவரை தடை உத்தரவை மீறிய 893 பேர் மீது 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பல வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 550 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, சமூக இடைவெளியை ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறோம். தற்போது அஜீத், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். தேவைப்பட்டால் தகுதியான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பயன்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பெரியசாமி, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்