வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் கறம்பக்குடி பகுதியில் கடலை அறுவடை பணி பாதிப்பு - விவசாயிகள் வேதனை

வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் கறம்பக்குடி பகுதியில் கடலை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2020-04-05 22:00 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகளாகவும், மீதமுள்ளவை வானம் பார்த்த பூமியாகவும் உள்ளது. விவசாயமே பிரதானமாக உள்ள அப்பகுதியில் நெல், கடலை, சோளம், உளுந்து, எள் போன்றவை அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. காவிரி பாசன பகுதிகளில் நெல், கடலை போன்றவற்றின் அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் மற்ற பகுதிகளில் கடலை, உளுந்து போன்ற பயிர்கள் தற்போது தான் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கறம்பக்குடி பகுதியில் விவசாய பணிகள் ஸ்தம்பித்துள்ளன. குறிப்பாக கடலை அறுவடை செய்ய வேலை ஆட்கள் கிடைக்காததால் வயலிலேயே கடலைகள் வீணாகி முளைக்கும் நிலைக்கு சென்று விட்டன. ஒரு, சில விவசாயிகள் குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து மிக சிரமப்பட்டு கடலை செடிகளை பிடுங்கி வயலில் போட்டுள்ளனர். அதில் கடலைகளை தனியாக பிரித்து எடுக்க முடியாததால் அவையும் வயலிலேயே வீணாகி வருகின்றன.

இதனால் விவசாயிகள் செய்வதறியாவது வேதனை பட்டு வருகின்றனர். இதுகுறித்து கடலை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயி ஒருவர் கூறியதாவது:- விவசாய பணிகளுக்கு ஆட்களை அழைத்து செல்லலாம் என அரசு அறிவித்த போதும், போலீசார் கெடுபிடி செய்வதால் பயந்து யாரும் வேலைக்கு வர மறுக்கிறார்கள்.

கடலை பயிர் அறுவடைக்கு இயந்திர பயன்பாடு இல்லாத நிலையில், வேலை ஆட்களும் கிடைக்காததால் வயலிலேயே கடலைகள் வீணாகி வருகின்றன. எங்களது உழைப்பு, வாழ்வாதாரம் பறிபோய் வருகிறது. எனவே விவசாய பணிகள் தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்