வீடுகளில் அகல்விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது: செல்போன் ‘டார்ச்’ ஒளியில் மிளிர்ந்த வேலூர் மாநகரம் - வாணவேடிக்கையும் நிகழ்ந்தது

கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க வீடுகளில் அகல்விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். வேலூர் மாநகரம் செல்போன் டார்ச் ஒளியாலும், வாணவேடிக்கைகளாலும் மிளிர்ந்தது.

Update: 2020-04-05 22:00 GMT
வேலூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக போராடி வருகின்றன. கொரோனாவை ஒழிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு மக்களுக்கும் உள்ளது. எனவே மக்களை ஒன்றிணைக்கவும், அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாகவும் சமூக விலகலை கடைபிடித்து வீடுகளில் இரவு 9 மணிக்கு விளக்கேற்ற வேண்டும் என மோடி தெரிவித்தார். அதன்படி நேற்று இரவு 9 மணி ஆனதும் பலர் தங்கள் வீடுகளின் விளக்குகளை அணைத்து விட்டு, வீட்டு வாசல் மற்றும் மாடிகளில் அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்றினர்.

மேலும் பலர் தங்களது செல்போனில் உள்ள ‘டார்ச்’விளக்கை ஒளிரவிட்டனர். குழந்தைகளும் பலர் தங்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை எரியவிட்டபடி ஏந்தி நின்றனர். ஒவ்வொருவரின் வீட்டு மாடியிலும் அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகள், செல்போன் ‘டார்ச்’ ஒளிர்ந்தது. மேலும் நகரின் பல்வேறு இடங்களில் வாணவேடிக்கை நிகழ்ந்தது. அப்போது பல்வேறு இடங்களில் வீட்டு மாடிகளில் நின்றிருந்த வாலிபர்கள் விசில் அடித்து தங்களது ஆதரவை ஆரவாரத்துடன் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அகல் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. 9 நிமிடங்களுக்கு பின்னர் வேலூர் நகரம் மின் விளக்குகளால் பழைய படி ஒளிர்ந்தது.

இதேபோல ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியிலும் மக்கள் வீடுகளில் விளக்கேற்றி, மத்தாப்பு கொளுத்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்