பாளையங்கோட்டையில் பிளாஸ்டிக் பையில் உணவு பொதிந்து வழங்கிய கடைக்காரர்களுக்கு அபராதம்

பாளையங்கோட்டையில் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பிளாஸ்டிக் பையில் உணவு பொதிந்து கொடுத்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2020-04-06 22:15 GMT
நெல்லை, 

144 தடை உத்தரவு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை கட்டுப்படுத்த உணவு பாதுகாப்பு துறை, தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறை, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உணவு பொருட்கள் தட்டுப்பாடு இன்றி, நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி பாளையங்கோட்டை தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள பலசரக்கு கடைகளில் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன், உதவி தொழிலாளர் நல ஆய்வாளர் சத்யநாராயணன் ஆகியோர் நேற்று பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது உணவு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியதுடன், அனைத்து கடைகளிலும் விலை பட்டியல் வைக்கவும் அறிவுறுத்தினர்.

இதே போல் பாளையங்கோட்டை திருச்செந்தூர் ரோட்டில் உள்ள கடைகளிலும் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து, தடை செய்யப்பட்ட அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வியாபாரி பக்ருதீனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் பையில் உணவு பொருட்கள் பொதிந்து வழங்கப்பட்டதையும் கண்டுபிடித்தனர். அந்த கடை வியாபாரி நம்பி சிவன் என்பவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தகவலை உணவு பாதுகாப்பு துறை நெல்லை மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்