பங்குனி உத்திரத்தையொட்டி ராமேசுவரம் கோவிலில் 1008 சங்காபிஷேகம் பக்தர்களே இல்லாமல் நடந்தது

பங்குனி உத்திரத்தையொட்டி ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் 1,008 சங்காபிஷேக பூஜைகள் நடந்தன.

Update: 2020-04-06 21:30 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் மேலவாசல் முருகன் சன்னதியில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஊரடங்கு, 144 தடை உத்தரவால் ராமேசுவரம் கோவிலின் மேலவாசல் முருகன்கோவில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டது.

பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று ராமேசுவரம் கோவிலின் மேலவாசல் சன்னதியில் அதிகாலை திறக்கப்பட்டு பால் அபிஷேகம் நடைபெற்று சாமிக்கு சிறப்பு அலங்காரம், தீப ஆராதனை நடந்தன. பின்பு உடனடியாக நடை சாத்தப்பட்டது.

சன்னதி அடைக்கப்பட்டிருந்த போதும் ராமேசுவரத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்கள் நடந்தும், இரு சக்கர வாகனத்தில் வந்தும் மூடப்பட்ட சன்னதி முன்பு சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று தரிசனம் செய்து சென்றனர். கோவில் முன்பு கூட்டத்தை தவிர்க்க சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் கூட்டத்துடன் களைகட்டி காணப்படும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையால் திருவிழா களையிழந்தது.

பங்குனி உத்திர திருநாளான நேற்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் விசுவநாதர் சன்னதி முன்பு 1008 சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு, அந்த சங்கில் கோடி தீர்த்தம் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சங்கின் மைய பகுதியில் பெரிய கலசத்திலும் புனிதநீர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து 1008 சங்குகளில் இருந்த புனித நீரால் கருவறையில் உள்ள ராமநாதசுவாமிக்கு மகா சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த பூஜையில் கோவிலின் பேஷ்கார் அண்ணாதுரை, கோவிலின் குருக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதே போல் அம்பாள் சன்னதில் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. இந்த பூஜைகள் பக்தர்கள் யாரும் இன்றி நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்