சோழவந்தான் அருகே சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதம்; வெற்றிலை கொடிக்கால்களும் நாசம்

சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம், குருவித்துறை ஆகிய பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் வாழைகள், வெற்றிலை கொடிக்கால்களும் சேதமடைந்தது.

Update: 2020-04-06 22:30 GMT
சோழவந்தான்,

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ,தாமோதரன்பட்டி, கல்லாங்காடு, குருவித்துறை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் கல்லாங்காடு பகுதியில் சுமார் 10 ஆயிரம் வாழைமரங்கள் சேதம் அடைந்தது. ஜெயக்குமார், அழகர், செல்வம் உள்பட 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் இந்த பலத்த காற்றுக்கு சரிந்து தரையோடு தரையாக விழுந்துள்ளது.

இன்னும் 2 மாதத்தில் பலன் தரக்கூடிய தருவாயில் இருந்த வாழைகள் பலத்த காற்றால் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதன் சேத மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என இப்பகுதி விவசாயிகள் வருத்தத்துடன் கூறினர். மேலும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இப்பகுதியில் அதிக அளவில் வெற்றிலை கொடிக்கால் விவசாயம் நடந்து வந்தது. நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த மழை வெற்றிலை கொடிக்கால்களையும் விட்டுவைக்கவில்லை. பலன்தரும் தருவாயில் இருக்கக்கூடிய வெற்றிலைகள் இந்த பலத்த காற்றுக்கு சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மன்னாடிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரன் மற்றும் கிராம உதவியாளர்கள் வாழை மற்றும் வெற்றிலை சேதங்கள் பற்றி கணக்கெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்