கொரோனா தடுப்பு பணியில் பல்லவன் நகர் பகுதி புறக்கணிப்பு - திருவண்ணாமலை நகராட்சி மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை பல்லவன்நகர் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

Update: 2020-04-06 22:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் சுமார் ரூ.30 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் பல்லவன் நகர், நாவக்கரை, சகாயநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் வசிக்கும் பல்லவன்நகர், சகாயநகர், நாவக்கரை பகுதியில் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் நடக்கவில்லை என நகராட்சி மீது பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

நகராட்சி நிர்வாகம் மூலம் கோவில்கள் உள்ள பகுதிகளில் மட்டுமே அடிக்கடி கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மக்கள் குடியிருக்கும் பகுதியில் கிருமிநாசினி தெளிப்பதில்லை. மேற்கண்ட பகுதிகளில் இதுவரை கிருமி நாசினி தெளிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் இருந்த பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றியுள்ள பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் நகராட்சி நிர்வாகம் இதனை துளிக் கூட கருதில் கொள்ளாமல் மெத்தனமாக உள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இரு வண்ண அனுமதி அட்டை வழங்கும் பணியும் சரிவர நடைபெறவில்லை. இதனால் எங்கள் பகுதியை நகராட்சி புறக்கணித்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே எங்கள் பகுதியிலும் அனைத்துவிதமான தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்