ஊரடங்கினால் கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் வேலையிழப்பு

கரூரில் ஊரடங்கினால் கயிறு திரிக்கும் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிவாரணம் வழங்கிட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-04-06 22:00 GMT
கரூர், 

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை, தோகைமலை, குளித்தலை உள்ளிட்ட இடங்களில் கயிறு திரிக்கும் தொழிலில் பரவலாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வேலூர் கம்பர்மலை உள்ளிட்ட இடங்களில் தென்னந்தோப்புகள் அதிகம் இருப்பதால் அங்கிருந்து தேங்காய் நார்களை வாங்கி வந்து குடிசை தொழிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. தேங்காய் நார்களை பதப்படுத்தி, சைக்கிளிலுள்ள இரும்பு சக்கரத்தின் மூலம் செய்யப்பட்ட ராட்டையில் வைத்து சுழற்றி இழுத்து கயிறு திரிப்பில் ஈடுபடுகின்றனர். குடிசை வீடுகள் கட்டுவதற்காகவும், கட்டிட பணிகளின் போது சாரம் உள்ளிட்டவை அமைப்பதற்கும், பந்தல் தொழிலாளர்களின் மூலதனமாகவும் கயிறு இருந்ததால் அதனை தேடி பிடித்து பலரும் வாங்கி சென்றனர். தற்போது கொரோனாவால் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என்பதால் பந்தல் தொழில் செய்வோர் கயிறு வாங்க முன்வருவதில்லை.

மேலும் கட்டுமான பணிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், சாரம் கட்டுவது ஆகிய பணிகளுக்கு கயிறு வாங்க யாரும் வருவதில்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே உற்பத்தி செய்யப்பட்ட கயிறுகள் தேக்கம் அடைந்திருக்கின்றன. இதனால் கயிறு திரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பலரும் வேலையிழந்து பொருளாதார சரிவுக்குள்ளாகி தவிக்கின்றனர். மேலும் தேங்காய் நார்களின் விலையேற்றம், அதனை வெளியிடங்களில் இருந்து கொண்டு வருவதற்கான கூலி உள்ளிட்டவற்றால் அதிக கயிறு திரிக்க அதிக செலவாகிறது. இந்த நிலையில் ஊரடங்கினால் அதனை விற்க முடியாத சூழல் வந்திருப்பது வேதனையளிக்கிறது. எனவே அரசு உரிய நிவாரணம் வழங்கி கயிறு திரிக்கும் தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என தாந்தோணிமலையை சேர்ந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்