ஊரடங்கு உத்தரவை மீறியதாக தஞ்சை சரகத்தில் 8,989 பேர் கைது - டி.ஐ.ஜி. லோகநாதன் தகவல்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தஞ்சை சரகத்தில் 8,989 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.

Update: 2020-04-06 22:00 GMT
தஞ்சாவூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்கவும், தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை தடுத்து நிறுத்தவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாநகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கபசுர குடிநீர் நேற்று வினியோகம் செய்யப்பட்டது.

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அண்ணாசிலை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், அந்த வழியாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கும் கபசுர குடிநீரை தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவை கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். தஞ்சை சரகத்தில் உள்ள தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8,689 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 8,989 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கால அளவு காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை என தமிழக அரசு குறைத்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பொது இடங்களில் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க போலீசார் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக 144 வாகன எதிரி என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அடிக்கடி தேவையில்லாமல் சாலையில் வலம் வரக்கூடிய வாகனங்களை கண்டறிய இந்த செயலி பயனுள்ளதாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு அந்த பகுதிக்குள் யாரும் செல்லவும், அங்கிருந்து வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை ரெயிலடி, பழைய பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையம், கீழவாசல், மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்