கர்நாடகத்தில் 14-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு வாபசா? - மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் பரபரப்பு தகவல்

கர்நாடகத்தில் 14-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் பதில் அளித்துள்ளார்.

Update: 2020-04-07 23:31 GMT
பெங்களூரு,

கர்நாடக மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு வருகிற 14-ந் தேதி நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு எடுக்கப்படும். கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து முடிவு எடுக்கப்பட வேண்டும். ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெறுவதாக இருந்தால், அதை படிப்படியாக தான் வாபஸ் பெற வேண்டும். ஒரே நேரத்தில் ஊரடங்கை வாபஸ் பெற முடியாது.

கொரோனா அதிகம் பாதித்துள்ள சில குறிப்பிட்ட பகுதிகளில் இன்னும் 2 வாரங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்துவேன். ஊரடங்கு உத்தரவால், மாநில அரசுக்கு வரி வருவாய்கள் பெருமளவில் குறைந்துவிட்டன. இதனால் அரசு நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதனால் அரசின் செலவுகளை குறைப்பது தொடர்பாக அரசு சில கடினமான முடிவுகளை எடுக்கும்.

மாநில அரசின் நிதிநிலை குறித்து நிதித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. தற்போதைக்கு என்ன தேவை, ஒட்டுமொத்த செலவு எவ்வாறு இருக்க வேண்டும், செலவை குறைத்து எவ்வளவு மிச்சப்படுத்த முடியும் என்பது குறித்தும், அமைப்புசாரா, அமைப்புசார் தொழிலாளர்களின் நலன் மற்றும் பிற துறைகளுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும், மாநில அரசின் நிதிநிலை என்ன என்பது குறித்தும் ஆராய வேண்டும்.

அதன் அடிப்படையில் சில முடிவுகளை எடுக்க வேண்டும். சரக்கு-சேவை வரி, மோட்டார் வாகன வரி போன்ற அனைத்து வரி வருவாயும் நின்றுவிட்டது. ஆனால் அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் அல்லவா? சில தவிர்க்க முடியாத செலவுகள் இருக்கின்றன. அதாவது, தேசிய மற்றும் சர்வதேச அளவில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும். அரசின் முன் சில நிதி நெருக்கடிகள், சவால்கள் உள்ளன.”

இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்