ஊரடங்கு உத்தரவால் பவுர்ணமி தினத்தில் வெறிச்சோடிய கிரிவலப்பாதை - முக்கிய சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது

லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் பவுர்ணமி தினமான நேற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதை தடைஉத்தரவு காரணமாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முக்கிய சாலைகளும் சீல்வைக்கப்பட்டது.

Update: 2020-04-07 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரம் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோவில்களில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு நுழைவு வாயில்கள் மூடப்பட்டு உள்ளது.

அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 11.01 மணிக்கு தொடங்கி இன்று (புதன்கிழமை) காலை 8.05 மணி வரை உள்ளது. வழக்கமாக இந்த நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே அருணாசலேஸ்வரரை நினைத்து வழிபடலாம் என்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தடை காரணமாக நேற்று பவுர்ணமியாக இருந்தாலும் திருவண்ணாமலையில் யாரும் கிரிவலம் செல்லவில்லை. இதனால் பவுர்ணமி தினமான நேற்று கிரிவலப் பாதை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆங்காங்கே சாமியார்கள் மட்டும் அமர்ந்து இருந்தனர். மேலும் கிரிவலப் பாதையில் உள்ள முக்கிய இணைப்பு சாலைகளான செங்கம் சாலை, காஞ்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து சீல் வைத்தனர். அந்த வழிகளில் அத்தியாவசிய தேவைக்காக ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டது. கிரிவலப் பாதையில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்