விழுப்புரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-04-08 05:43 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் கம்பன் நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வெளியே வரக்கூடிய பகுதி உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனை நேற்று காலை பணம் எடுக்க சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் கனகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தையும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர்.

அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று அங்குள்ள எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும், அந்த சமயத்தில் போலீசார் ரோந்து வருவதை அறிந்ததும், அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றிருப்பதும் தெரியவந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் கொள்ளை போகாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியது. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்