போலீசார் சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

மதுரை மாவட்டத்தில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட போலீசார் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

Update: 2020-04-08 21:45 GMT
மதுரை, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து மதுரைக்கு வந்து வேலை செய்த ஏராளமான தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீசார் மதுரை ஒத்தக்கடை, சிலைமான், சக்கிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க முடிவு செய்தனர். அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தலின் பேரில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் இந்த பகுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரிசி, பருப்பு, மைதா, 15 விதமான காய்கறி உள்ளிட்ட பல்வேறு விதமான நிவாரண பொருட்களை வழங்கினர். 

இதுபோல் ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கும் நிவாரண பொருட்களை வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தலின் பேரில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு கடந்த சில தினங்களாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சாலையோரங்களில் தங்கி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயார் செய்து விற்பனை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 130-க்கும் மேற்பட்டோருக்கு தினமும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபோல் மதுரை கடச்சனேந்தல், சத்திரப்பட்டி பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கிருமிநாசினி, கை சுத்திகரிப்பான், முக கவசம் உள்ளிட்டவைகளை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா வழங்கினார். மேலும் சமூக இடைவெளி, தன்சுத்தம் குறித்து காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியராஜா, ஊமச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு, பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்