கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலெக்டர் ஆலோசனை

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-04-08 22:30 GMT
சிவகங்கை, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊராட்சிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசியதாவது:-

ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் போன்றவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைகாலம் தொடங்குவதால் குடிநீர் பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். மேலும் அத்தியாவசிய பணிகளுக்காக ஊராட்சி ஊழியர்கள் மதியம் வெளியில் சென்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைதொடர்ந்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:-

நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் ஊராட்சிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று வழங்கலாம். மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பணிகளுக்காக செல்லும் ஊராட்சி ஊழியர்களை போலீசார் தடுத்தால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், கொரோனா குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்