விழிப்புணர்வு இல்லாமல் வீதிக்கு வரும் மக்கள்: மதுரையில் தடையை மீறிய 1896 பேர் கைது

144 தடை உத்தரவை மீறியதாக மதுரை நகரில் இதுவரை 1896 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழிப்புணர்வு இல்லாமல் வீதிக்கு வரும் மக்களால் மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலை உள்ளது.

Update: 2020-04-09 23:15 GMT
மதுரை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதம் உத்தரவின்படி போலீசார் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் தெருக்களில் தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் கடைகளில் கூட்டம் அதிகமாக கூடி வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்க கூடிய கடைக்காரர்கள் மீது வழக்கு, கைது நடவடிக்கை பாய்கிறது.

மேலும் மதுரை நகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காகவும், பொதுமக்களின் நலன் கருதியும் வைகை ஆற்றின் வடக்கே இருந்து தெற்கு பகுதிக்கு செல்லாமல் இருப்பதற்காகவும் மதுரை நகரில் குருவிக்காரன் சாலை பாலம், வைகை ஆற்றில் போடப்பட்ட தற்காலிக பாலம், ஓபுளாபடித்துறை பாலம், செல்லூர்-சிம்மக்கல் இணைப்பு பாலம், ஆரப்பாளையம்-தத்தனேரி இணைப்பு பாலம், செல்லூர்- எல்.ஐ.சி.பாலம் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நகரில் உள்ள மற்ற பாலங்கள் மருத்துவம் தொடர்பான அவசர காலத்திற்கும், அத்தியாவசிய பொருட்களின் தேவைகளுக்காகவும் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் பொதுமக்கள் போலீசாரின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் எந்த நேரமும் நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். இதனால் சமூக இடைவெளி என்பது நகரில் கேள்விக்குறியாக உள்ளது. இதனை தடுக்க கோரிப்பாளையம் வைகை ஆற்றின் பாலம் வழியாக செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்துமாறு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலை அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டது. அதில் அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் வந்தவர்களிடம் விசாரித்த போது ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களை தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அங்கு போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தேவையில்லாமல் அந்த வழியாக வந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, மதுரை நகரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் தடை உத்தரவை கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கும், போலீசாருக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும். தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கிடையில் கடந்த 17 நாட்களில் நகரில் தடை உத்தரவை மீறியதாக 1896 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2,450 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் விழிப்புணர்வு இல்லாமல் அதிக அளவில் மக்கள் சுற்றி திரிகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி பலர் சுற்றி திரிவதால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைகள், வங்கிகள் ஆகியவற்றில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதிலும் அவர்கள் அதிக அக்கறை கொள்வது இல்லை.

எவ்வளவோ விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கடும் நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் பொருட்படுத்தவில்லை என்பதற்கு நேற்று மதுரை கோரிப்பாளையம் பாலம் பகுதியில் வந்த வாகன ஓட்டிகளே சாட்சி. எனவே இனியாவது மக்கள் பொறுப்புடன் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என போலீஸ், மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்