வாரத்துக்கு ஒரு தடவைக்கு மேல் வாகனங்களில் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் ராமன் எச்சரிக்கை

இருசக்கர வாகனங்களில் வீட்டை விட்டு வாரத்துக்கு ஒரு தடவைக்கு மேல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-04-09 22:45 GMT
சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடியில் வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி பாதை எடப்பாடி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் ராமன், கிருமி நாசினி பாதையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

பின்னர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டை பார்வையிட்டு காய்கறிகளின் விலையை கேட்டறிந்தார், அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி செல்பவர்கள் அதிகம் உள்ளனர். போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை தடுக்க மாற்றுவழி குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதன் முடிவில் இரு சக்கர வாகனங்களில் பலவிதமான ஸ்டிக்கர்கள் அல்லது பெயிண்டு அடிக்கப்படும். அதில் உள்ள நிறத்தின் அடிப்படையில் அந்த வாகனங்கள் எந்த தேதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க எடுத்து வரப்பட்டது என்பது தெரியும். வாரத்துக்கு ஒருமுறை தான் வெளியில் வரவேண்டும். வாரத்துக்கு ஒருதடவைக்கு மேல் வாகனங்களில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று காய்கறிகள் வழங்கும் விதமாக தோட்டக்கலை துறையின் சார்பாக மலிவு விலையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று சேலம் சூரமங்கலம் உழவர்சந்தையில் காய்கறி விற்பனை செய்யப்படும் நடமாடும் காய்கறி வாகனங்களை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

தோட்டக்கலைத்துறையின் மூலம் வழங்கப்படும் இந்த காய்கறி தொகுப்பில் பெரிய வெங்காயம் ½ கிலோ, கேரட் ¼ கிலோ, முள்ளங்கி ¼ கிலோ, சேனை ½ கிலோ, தக்காளி ½ கிலோ, கத்தரி ¼ கிலோ, பச்சைமிளகாய் 100 கிராம், வாழைக்காய், மாங்காய், முருங்கைக்காய், குடை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை ஆகிய 13 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு இடம் பெற்றுள்ளது.

இந்த காய்கறி தொகுப்பு சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 20 நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் சுழற்சி முறையில் விற்பனை செய்யப்பட உள்ளது. 

மேலும் செய்திகள்