தொழிலாளர், ஆட்டோ ஓட்டுனர் நல வாரியங்களில் பதிவு, புதுப்பித்த 44,890 பேருக்கு நிவாரண பொருட்கள்- நாளை முதல் வினியோகம்

தொழிலாளர், ஆட்டோ ஓட்டுனர் நல வாரியங்களில் பதிவு செய்தவர்கள், புதுப்பித்தவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிவாரண பொருட்கள் நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

Update: 2020-04-14 22:45 GMT
வேலூர், 

கொரோனா பாதிப்பு நிவாரணமாக கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் நல வாரியம் ஆகியவற்றில் பதிவு செய்து, தற்போது வரை பதிவினை புதுப்பித்துள்ளவர்கள் மற்றும் அந்த நலவாரியங்களில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோருக்கு ரூ.1000 நிவாரணத் தொகை மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, பாமாயில் ஆகிய நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 44 ஆயிரத்து 890 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கிற்கு நேரடியாக ரூ.1000 படிப்படியாக செலுத்தப்பட்டு வருகிறது. அப்பயனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டும் அப்பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ள ரேஷன் கடை மூலமாக நாளை (வியாழக்கிழமை) முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நலவாரியங்களில் நாளது தேதிவரை பதிவினை புதுப்பிக்காத நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள்.

பயனாளிகளுக்கு சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் டோக்கன் மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். ஒப்புகை சீட்டில் கேட்கப்பட்டுள்ள தங்களது வங்கி கணக்கின் விவரங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு தங்களது நலவாரிய அடையாள அட்டையின் அசல் அல்லது நகல், ஆதார் அட்டையை கட்டாயம் ரேஷன் கடைக்கு கொண்டு வரவேண்டும்.

டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டும். ரேஷன் கடையில் வரிசையில் நிற்கும் போது 2 மீட்டர் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்