ஊரடங்கை மீறி எல்லையை கடக்கும் பொதுமக்கள்: கீழ்நாடுகாணியில் சோதனைச்சாவடி அமைத்து கேரள சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு

ஊரடங்கை மீறி எல்லையை கடக்கும் பொதுமக்களை கீழ்நாடுகாணியில் சோதனைச்சாவடி அமைத்து கேரள சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Update: 2020-04-14 22:30 GMT
கூடலூர்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மாநில எல்லைகள் மூடப்பட்டு இருக்கின்றன. அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களை தவிர, பிற வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கேரளா, கர்நாடகா, தமிழகம் என 3 மாநிலங்கள் சந்திக்கும் பகுதியான கூடலூரை கொண்டு உள்ளது. இங்குள்ள எல்லைகளும் மூடப்பட்டு கிடக்கின்றன.

ஆனால் கேரளாவில் இருந்து கூடலூருக்கும், கூடலூரில் இருந்து கேரளாவுக்கும் பொதுமக்கள் ஊரடங்கை மீறி சென்று வருகின்றனர். சாலைகள் மூடப்பட்டு உள்ளதால், அடர்ந்த வனம் வழியாக உள்ள குறுக்குவழியில் பயணிக்கின்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் நிலவுகிறது.

கூடலூர்-கேரள எல்லையில் உள்ள கீழ்நாடுகாணியில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வழிக்கடவு என்ற இடத்தில் கேரள சோதனைச்சாவடி இருக்கிறது. அதன் வழியாக கூடலூரில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து கூடலூருக்கும் வாகனங்கள் கடந்து செல்ல முயல்கின்றன. அவற்றை கேரள சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். எனினும் சிலர் கீழ்நாடுகாணியில் இருந்து வழிக்கடவை சென்றடைவதற்கு முன்னதாகவே வனப் பகுதி வழியாக உள்ள குறுக்கு வழியில் நடந்தே எல்லைகளை கடக்கின்றனர்.

இதை தடுக்க கீழ்நாடுகாணியில் கேரள சுகாதாரத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து, கண்காணித்து வருகின்றனர். மேலும் எல்லையை கடக்க முயல்பவர்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வருகின்றனர். அங்கு கேரள தண்டர்போல்ட் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அத்தியாவசிய தேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களாக இருந்தாலும், உரிய அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும். எல்லையை கடக்க முயலும் நபர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். எல்லையில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவுக்குள் சோதனைச்சாவடி உள்ளது. இதை பயன்படுத்தி குறுக்கு வழியில் அதிகம் பேர் கேரளாவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.

இதனால் எல்லையான கீழ்நாடுகாணியிலேயே தற்காலிக சோதனைச்சாவடியை அமைத்து, அவர்களை தடுத்து வருகிறோம். அது அடர்ந்த வனப்பகுதி என்பதால், பகலில் மட்டுமே கண்காணிக்க முடியும். இரவில் காட்டுயானைகள் இருப்பதால், வழிக்கடவு சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்