நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளி - போலீசில் சரண் அடைந்தார்

கும்மிடிப்பூண்டி அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நள்ளிரவில் தூங்கும்போது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த கணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Update: 2020-04-16 23:45 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜாகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பா (39). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர். மகன், ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். வீட்டில் ரமேஷ், புஷ்பா இருவர் மட்டும் வசித்து வந்தனர்.

புஷ்பாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரமேஷ், மனைவியை கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு புஷ்பா, கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே உள்ள ஒட்டர்பாளையம் கிராமத்துக்கு சென்றுவிட்டார்.

கடந்த 13-ந்தேதிதான் புஷ்பா மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.

கழுத்தை அறுத்துக் கொலை

இந்தநிலையில் மீண்டும் அந்த கூலித்தொழிலாளி புஷ்பா வீட்டுக்கு சென்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தார். இதை ரமேஷ் நேரில் பார்த்துவிட்டார். உடனடியாக அந்த கூலித்தொழிலாளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ரமேஷ், மீண்டும் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் வீட்டில் தூங்கி விட்டனர்.

அப்போது நள்ளிரவில் எழுந்த ரமேஷ், தனது மனைவி புஷ்பாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் கவரைப்பேட்டை போலீஸ் நிலையம் சென்று நடந்த விவரங்களை கூறி போலீசில் சரண் அடைந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கவரைப்பேட்டை போலீசார், கொலையான புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்ய பயன் படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்