தென்காசி மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலுக்கு வாய்ப்பு இல்லை - மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரன் பேட்டி

தென்காசி மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலுக்கு வாய்ப்பு இல்லை என்று மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரன் கூறினார்.

Update: 2020-04-17 22:30 GMT
தென்காசி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று தென்காசி மாவட்டத்தில் ஆய்வு செய்தார். தென்காசி அருகே உள்ள நன்னகரம் இந்திராநகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 2 பேர்களின் வீடுகள் இருக்கும் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை கருணாகரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் புளியங்குடி சென்று ஆய்வு நடத்தினர். அதன்பிறகு தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிகாரி கருணாகரன் தலைமை தாங்கினார். போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநபு, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மரகதநாதன், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் முருகவேல், துணை இயக்குனர் டாக்டர் ராஜா, நெல்லை திட்ட இயக்குனர் மந்திராசலம், நகரப்பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், நெல்லை கூட்டுறவு இணைப்பதிவாளர் பிரியதர்ஷினி, புளியங்குடி நகரசபை ஆணையாளர் குமார் சிங் உள்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சமூக பரவலுக்கு வாய்ப்பு இல்லை

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரன், கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு அரசு வழங்கிய நிவாரண தொகையான ரூ.1000 இந்த மாவட்டத்தில் 98 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 5 முகாம்களில் 43 பேர் உள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அவர்கள் பணியாற்றிவந்த நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் பாதுகாப்பாக உள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள், பால் போன்றவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தனித்து இருக்க வேண்டும். விலகி இருக்க வேண்டும்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான சந்தை போன்ற இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் வருகிற 20-ந் தேதி முதல் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். புளியங்குடி பகுதியில் தெருக்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அங்கு அரசு நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று சமூக பரவலுக்கு வாய்ப்பு இல்லை.

6 ஆயிரம் படுக்கைகள்

தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 443 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் 2,000 படுக்கைகள் இருக்கும் அளவிலும் சமுதாயக் கூடங்கள் போன்றவற்றில் 4 ஆயிரம் படுக்கைகள் இருக்கும் அளவிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் எங்கும் கூட்டமாக கூடாமல் இருக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளில் கொண்டுவந்து சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் தேவையான அளவிற்கு வென்டிலேட்டர்களும் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்