நெல்லை மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

நெல்லை மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2020-04-17 22:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

நெல்லை புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் மட்டும் 314 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 247 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் நெல்லை மாநகர பகுதியில் நேற்று முன்தினம் மட்டும் 54 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். உரிய படிவத்தில் தங்கள் முழு விவரங்களை எழுதி அதில், வாகனங்களின் ஆர்.சி. புத்தகம் நகல், இன்சூரன்ஸ் நகல் ஆகியவற்றுடன் உரிய போலீஸ் நிலையத்தில் கொடுத்து தங்கள் வாகனங்களை மீட்டுக் கொள்ள வேண்டும்.

கோர்ட்டு நடவடிக்கை தொடங்கியதும், முறைப்படி சென்று தங்கள் வாகனங்களுக்கு உரிய அபராதத்தை செலுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

வாகனங்கள் ஒப்படைப்பு

அதன்படி நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் நிலையங்களில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை பறி கொடுத்தவர்களின் கூட்டம் அலை மோதியது. உரிய படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

மேலும் செய்திகள்