கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்காக மேலும் 1,000 விசேஷ உடைகள் நாகர்கோவிலுக்கு வந்தது ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடியது

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்காக மேலும் 1,000 விசேஷ உடைகள் நாகர்கோவிலுக்கு வந்தது. இந்த உடைகள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடியது.

Update: 2020-04-18 01:49 GMT
நாகர்கோவில், 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்காக மேலும் 1,000 விசேஷ உடைகள் நாகர்கோவிலுக்கு வந்தது. இந்த உடைகள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நாகர்கோவிலில் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வர ‘சீல்‘ வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இந்த பகுதியில் பரிசோதனைக்காக நகர்நல மையங்களைச் சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களும் மற்றும் கிருமிநாசினி தெளிக்க தூய்மை பணியாளர்களும் செல்கிறார்கள். அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க விசேஷ உடை தயாரிக்கப்பட்டது. அந்த வகையில் 500-க்கும் மேற்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பாதுகாப்பு கவச உடைகள் மாநகராட்சி சார்பில் வாங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு உடை, திரவம்

அவற்றில் சிலவற்றை நகர்நல மையத்தினரும், தூய்மை பணியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகமாகும் பட்சத்தில் அதற்கு தகுந்தாற்போல் ஒரு முறை பயன்படுத்தும் கவச உடைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி சார்பில் 1000 கவச உடைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதேபோல காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், நகர்நல மையங்களில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், மாநகராட்சி முழுவதும் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கை சுத்தப்படுத்தும் திரவம் (ஹேன்ட் சானிட்டைசர்) வழங்க 1000 லிட்டர் கை சுத்தப்படுத்தும் திரவத்துக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டு இருந்தது.

பார்வையிட்டனர்

இவை இரண்டும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது. அவற்றை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், நகர்நல அதிகாரி கின்சால் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் கவச உடைகள் சரியாக இருக்கிறதா? என சில தூய்மை பணியாளர்கள் போட்டு பார்த்தனர்.

மேலும் செய்திகள்