பலாப்பழத்திற்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்

பலாப்பழத்திற்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-17 21:45 GMT
கடலூர்,

பலாப்பழம் என்றால் நம் அனைவரின் நினைவிற்கும் வருவது பண்ருட்டி பலா ஆகும். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, அண்ணா கிராமம், கடலூர், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம் மற்றும் விருத்தாசலம் ஆகிய வட்டாரங்களில் 700 ஹெக்டேர் பரப்பிற்கும் கூடுதலாக பலா மரங்கள் தனித் தோட்டங்களாகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பலாப்பழம் விற்பனை செய்வதால் கூடுதலான வருமானம் கிடைக்கிறது.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பலாப்பழங்கள் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யமுடிவதில்லை. இதனால் பழங்கள் அறுவடை செய்யாமல் மரத்திலேயே அழுகி சேதமடைவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக உள்ள பலாப்பழங்களை விவசாயிகளின் வயல்களுக்கு சென்று தோட்டக்கலைத் துறை பணியாளர்கள் மூலம் சேகரித்து கடலூர் நகராட்சி மூலம் காய்கறிகள் தொகுப்பு விநியோகம் செய்யப்படும்போது, நுகர்வோர், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மருத்துவத் துறை பணியாளர்களுக்கும் பலாப்பழங்கள் வழங்கப்படுகிறது. இதனால் பலா சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பலாப்பழம் விற்பனை செய்யப்படாமல் ஏற்படும் இழப்பு தவிர்க்கப்பட்டது.

பலாப்பழங்களை வியாபாரிகள் எடுத்துச்சென்று விற்பனை செய்வதற்கு ஏதுவாக வெளி மாநிலங்களுக்கு மாவட்ட கலெக்டரும், வெளியூர்களுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலர்களும் வாகன அனுமதி வழங்கியுள்ளனர். இதையடுத்து 85 வாகனங்களில் 575 டன் பலாப்பழங்கள் சந்தைப்படுத்த தக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பலாப்பழங்களை வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் வாகனத்தின் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் பலாப்பழங்கள் முதலில் ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்பொழுது பழம் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ.125 வரை கூடுதலான விலை கொடுத்து வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதன் மூலம் கூடுதல் விலை கிடைக்கப்பெறுவதால் பலா பழங்களின் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் வரும் வாரங்களில் பலா விவசாயிகளுக்கு மேலும் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்