பராமரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கம்: முதியோர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று திரும்ப கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

முதியோர்களை பராமரிப்போர் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல வேண்டுமெனில் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-04-18 04:48 GMT
திருவண்ணாமலை,

முதியோர்களை பராமரிப்பவர்கள் அவர்களை பராமரிப்பதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். முதியோர்களை பராமரிக்கும்போது மூக்கு மற்றும் வாயை திசு காகிதம் அல்லது துணியினால் மூடிக்கொள்ள வேண்டும். முதியோர்கள் உபயோகப்படுத்தும் கைத்தடி, நடைவண்டி, சக்கர நாற்காலி மற்றும் பெட்பேன் ஆகியவற்றினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அடிக்கடி கைகழுவ அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

சரியான உணவு, தண்ணீர் உட்கொள்வதை சரிபார்க்க வேண்டும். அவர்களது உடல் நலனை கண்காணிக்க வேண்டும். உடல் வலியுடன் கூடிய அல்லது உடல் வலி அல்லாத காய்ச்சல், மூச்சு விடுவதற்கு சிரமப்படுதல், தொடர்ச்சியான இருமல் போன்றவை புதிதாக ஏற்பட்டால், திடீரென குறைந்த அளவு உணவு உட்கொண்டாலோ, உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டாலோ உடனடியாக உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இருந்தால் முதியோர்களுக்கு அருகில் செல்லக் கூடாது. முதியோர்களை எப்போதும் படுக்கையிலே வைத்திருக்கக் கூடாது. கை கழுவாமல் அவர்களை தொடக் கூடாது.

அதேபோல் முதியோர்கள் வீட்டில் இருந்தபடியே உறவினர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லாமல், சமூக இடைவெளியை பின்பற்றி, அக்கம், பக்கத்தினருடன் உரையாடலாம். தனிமையை தவிர்க்க வேண்டும். பொழுது போக்க புகையிலை, மது, போதைப் பொருட்கள் போன்றவற்றை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் 80461 10007 என்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். பகலில் அதிக தூக்கம், பதில் கூற இயலாமல் இருப்பது, தொடர்பில்லாமல் பேசுவது போன்ற பிரச்சினைகள் இருந்தாலோ, திடீரென உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ள இயலாத நிலை இருந்தாலோ உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மேலும் முதியோர்கள் வதந்திகளை பரப்புதல் மற்றும் பகிர்தல் கூடாது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்களை தாங்களே பராமரிக்க இயலாத மருத்துவ உதவி தேவைப்படும் முதியோர்களை பராமரிக்கவும் மற்றும் மருத்துவ உதவி அளிக்கவும், அவர்களது இருப்பிடத்திற்கு வந்து பராமரிப்பவர்கள் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவினால், வெளியில் வர இயலாத நிலை உள்ளது.

இதனால் முதியோர்களை பராமரிக்கும் பணிக்கு செல்வோர், முதியோர்களின் இருப்பிடத்திற்கு சென்று திரும்பவும் மற்றும் முதியோர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் அனுமதி சீட்டு பெறுவதற்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்