கடலூர் மாவட்டத்தில், நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது - கலெக்டர் அன்புசெல்வன் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது என்று கலெக்டர் அன்புசெல்வன் கூறினார். இது தொடர்பாக அவர் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2020-04-18 22:15 GMT
கடலூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் மாவட்டத்தில் பரவும் கொரோனாவை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய 3 மண்டலமாக பிரித்து உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலை இருந்தது. அதன்பிறகு குறிப்பிட்ட சில நாட்களில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சிவப்பு மண்டலத்துக்குள் கடலூர் வந்து விட்டது. இதனால் இந்த ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டிய நிலை உள்ளது.

அடுத்த மாதம் 3-ந்தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது. நாளை (திங்கட்கிழமை) முதல் இந்த ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும். ஊரடங்கை முழுமையாக விலக்கி கொள்ள சாத்தியம் இல்லை என்பதை மீண்டும் மாவட்ட மக்களுக்கு தெளிவுப்படுத்துகிறோம்.

சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு செல்ல வேண்டுமென்றால் தொடர்ந்து 14 நாட்களுக்கு புதிய தொற்று வரக்கூடாது. இதே நடைமுறை தான் பச்சை மண்டலத்திற்கு செல்வதற்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஆகவே 28 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லையென்றால் மட்டுமே இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா நோய் சமூக தொற்றாக மாறக்கூடாது என்பதற்காக, கொரோனா நோய் பாதித்தவர்கள் தங்கி இருந்த பகுதிகளை கண்டறிந்து, 7 கிலோ மீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக நிர்ணயித்து சுகாதார பணிகளை செய்து வருகிறோம்.

கடலூர் மாவட்டத்தில் 6 தாலுகா பகுதிகளில் 117 வருவாய் கிராமங்கள் 5 கிலோ மீட்டர் தொலைவிலும், 83 வருவாய் கிராமங்கள் 2 கிலோ மீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வருகிறது. ஆக 200 வருவாய் கிராமங்கள் உள்ளடங்கி உள்ளது. அதில் 5 நகராட்சிகளில் விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய 3 நகராட்சிகளும், வடலூர், குறிஞ்சிப்பாடி, கிள்ளை, லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில் ஆகிய பேரூராட்சிகளும் சிவப்பு மண்டல பகுதியில் வருகிறது.

மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் சிவப்பு மண்டல பகுதியில் வருவதால் இந்த இடங்களில் இருந்து வெளியே யாரும் வரக்கூடாது. உள்ளேயும் செல்ல அனுமதியில்லை. கட்டுப்பாட்டு மண்டலத்தில் கொரோனா தொற்று உள்ள கடைசி நபருக்கு பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிப்போம். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மீறி செல்வோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

ஏற்கனவே விதி விலக்கு அளிக்கப்பட்டு விவசாய சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. 3 நிறங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரத்திற்கு 2 முறை மட்டுமே வெளியே வர முடியும். இந்த நடைமுறை மேலும் கடுமையாக்கப்படும்.

20-ந்தேதிக்கு (நாளை) பிறகு குறிப்பிட்ட தொழிலை தொடங்கலாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் நமது மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது. அதேபோல் பாதுகாக்கப்படாத பகுதியில் இருப்பவர்கள் அவர்களாகவே கடைகள், நிறுவனங்களை திறக்கக்கூடாது. மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் அளித்து, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு தான் திறக்க முடியும்.

மேலும் கடைகளை திறப்பதற்கு முன்பு கண்டிப்பாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

கிராம பூசாரிகள் 1,323 பேர், நலிவடைந்த கலைஞர்கள் 1933 பேர் உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 3,721 நடமாடும் காய்கறி கடைகள் மூலமாக 1,757 டன் காய்கறிகள் விற்பனை செய்துள்ளோம். ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கிட 87 பள்ளிவாசல்களில் 138 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்பட உள்ளது. பள்ளிவாசல் நிர்வாகிகள் சேமிப்பு கிடங்கில் இருந்து பெற்று, அதை வீடுகளுக்கு நேரிடையாக சென்று வழங்க வேண்டும். பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச கூடாது. விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது. அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 3-ந்தேதி வரை கண்டிப்பாக ஊரடங்கு இருப்பதால் பொதுமக்கள் கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்