கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.

Update: 2020-04-19 23:57 GMT
பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பாவை காங்கிரஸ் குழுவினர் நேற்று நேரில் சந்தித்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் நிலை குறித்து ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

20-ந் தேதிக்கு பிறகு இருசக்கர வாகனங்களை அனுமதிப்பதாக முதல்-மந்திரி அறிவித்தார். பின்பு அந்த முடிவை அவர் வாபஸ் பெற்றுள்ளார். இதை நான் வரவேற்கிறேன். ஊரடங்கு விதிகளை 100 சதவீதம் அனைவரும் பின்பற்ற வேண்டும். அப்போது தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும். ஊரடங்கு விதிகளை தளர்த்த வேண்டாம். யாருக்கும் விலக்கு அளிக்க வேண்டாம்.

நான் 2 நாட்கள் பல்வேறு துறை அதிகாரிகளை எனது அலுவலகத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினேன். அப்போது கொரோனாவை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவரங்களை பெற்றேன். இந்த விஷயத்தில் அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கி வருகிறது.

கர்நாடகத்தில் கட்டிட தொழிலாளர்களின் நல வாரியத்தில் ரூ.8 ஆயிரம் கோடி உள்ளது. அந்த நிதியில் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்குவதாக முதல்-மந்திரி அறிவித்தார். அந்த நிதியில் ரூ.30 கோடி மட்டுமே அரசு வழங்கியுள்ளது. அனைத்து கட்டிட தொழிலாளர்களுக்கும் இந்த நிதி உதவி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா பரிசோதனை

கூலித்தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவதாக அரசு சொல்கிறது. ஆனால் இதுவரை 1 லட்சம் தொழிலாளர்களுக்கு மட்டுமே உணவு பொட்டலம் கிடைத்து வருகிறது. பெங்களூருவில் மட்டும் 3 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். மாநிலத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனாவை தடுக்கும் பணிகளில் மற்ற மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை நாம் பின்பற்றலாம். கடந்த 3, 4 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்தில் பரிசோதனை எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எனவே முதல்-மந்திரி எடியூரப்பா, கொரோனா பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட நடவடிக்கை

ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக பா.ஜனதா தலைவர்கள் சிலர் பேசி வருகிறார்கள். அவ்வாறு பேசக்கூடாது என்று எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். ஆயினும் அவர்கள் தங்களின் பேச்சை நிறுத்தவில்லை. அத்தகையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ராய்ச்சூர், பல்லாரி, கொப்பல் ஆகிய மாவட்டங்களில் நெல் அறுவடை செய்யப்படுகிறது. அதை அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.

கைத்தறி நெசவாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த துணிகளை வாங்க ஆள் இல்லாததால், கஷ்டத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும். ரேஷன் அட்டை இல்லாத தொழிலாளர்களுக்கும் உணவு தானியங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்