திண்டுக்கல் மாவட்டத்தில், வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்ந்தது.

Update: 2020-04-19 22:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் டெல்லி மாநாடு மற்றும் வெளிமாநிலத்துக்கு சென்று வந்தவர்கள், அவர்களின் உறவினர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 69 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் முதியவர் ஒருவர் இறந்து விட்டார்.

மீதமுள்ள 42 பேரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதில் திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியை சேர்ந்த பெண், மேட்டுப்பட்டி மற்றும் கணவாய்பட்டி ஆகிய 2 பகுதிகளிலும் தலா ஒரு வாலிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் மூலம், அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 3 பேரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே சுற்றுலா விசாவில் திண்டுக்கல்லுக்கு வந்து மதபிரசாரம் செய்ததாக, வங்காளதேசத்தை சேர்ந்த 11 பேர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே அதில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்