ஸ்ரீவைகுண்டம் அருகே, வாழைத்தோட்டத்தின் நடுவில் சாராயம் காய்ச்சியதால் பரபரப்பு - 150 லிட்டர் ஊறல் அழிப்பு

கொரோனா ஊரடங்கையொட்டி ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைத்தோட்டத்தின் நடுவில் சாராயம் காய்ச்சியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-04-20 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. 

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி மது விற்பனைகள் நடந்து வருகிறது. சிலர் சாராயமும் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் தூத்துக்குடி அருகே சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து மாவட்டத்தில் சாராயம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். 

அதன்பேரில் தூத்துக்குடி மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பெலிக்ஸ் தலைமையிலான போலீசார் நேற்று ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் கிராமத்தில் சோதனை நடத்தினர்.

சாராயம் காய்ச்சியதால் பரபரப்பு

அங்கு தனியாருக்கு சொந்தமான ஒரு வாழைத்தோட்டத்தின் நடுவில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு இருந்த 150 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். இதுதொடர்பாக மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெள்ளூரை சேர்ந்த சேது என்பவரை தேடி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கையொட்டி ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைத்தோட்டத்தின் நடுவில் சாராயம் காய்ச்சிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்