பல்லடத்தில் சூறைக்காற்றில் சாய்ந்த 900 வாழைகளை தீ வைத்து எரித்த விவசாயி

பல்லடத்தில் சூறைக்காற்றில் சாய்ந்த 900 வாழைகளை விவசாயி ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-04-20 22:15 GMT
பல்லடம், 

பல்லடம் சித்தம்பலம் புதூரை சேர்ந்த மோகனசுந்தரம் மகன் கோவிந்தராஜ் (வயது 30). விவசாயி இவரது தோட்டத்தில் 2 ஏக்கரில் சுமார் 2 ஆயிரம் நேந்திரன் ரக வாழை மரங்கள் நட்டு வளர்த்து வந்தார். இந்த மரங்களில் பழத்தார்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. வழக்கமாக கேரளாவிற்கு பழத்தார்கள் அனுப்புவது வழக்கம், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஊரடங்கு உள்ளதால் கேரளாவுக்கு அனுப்புவதில் தடை ஏற்பட்டது.

இதனால் உள்ளூர் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த 9-ந்தேதி அன்று வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் சுமார் 900 வாழை மரங்கள் சரிந்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த பழத்தார்கள், வாழை மரங்கள் உள்பட அனைத்தும் சேதமானது. ஊரடங்கு நிலையில் விற்பனை குறைவால் உள்ளூர் வியாபாரிகளும் பழம் வாங்க முன்வரவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் காற்றுக்கு முறிந்த வாழை மரங்களை தீ வைத்து எரித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில் சுமார் ரூ.2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊரடங்கால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலையில்லாமல் கடும் நஷ்டப்பட்டு வருகிறோம்.தமிழக அரசு இதுபோல இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட என் போல் மிகவும் கஷ்ட நிலையில் இருக்கும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்