பூந்தமல்லி, திருவொற்றியூர் மண்டலத்தில் 9 வயது சிறுவன் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பூந்தமல்லி மற்றும் திருவொற்றியூர் மண்டலத்தில் 9 வயது சிறுவன் உள்பட 6 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2020-04-20 22:45 GMT
பூந்தமல்லி, 

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்துவந்த பூந்தமல்லியை சேர்ந்த மேலாளர் ஒருவருக்கும், அவருடன் சீட்டு விளையாடிய அவரது நண்பருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி அவர்களது ரத்த மாதிரிகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அதில் மேலாளரை ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்த ஆன்லைனில் ஜாதகம் பார்க்கும் அவரது 28 வயது நண்பருக்கும், அவரது உறவினர் மகனான 9 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இருவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதி முழுவதும் மீண்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருவொற்றியூர் மண்டலம்

திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எண்ணூர் ராமமூர்த்தி நகரில் சகோதரர்கள் உள்பட 4 பேர் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 2 நாட்களுக்கு முன்பு எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 10-வது தெருவைச் சேர்ந்த ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக உள்ள ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி தற்போது சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதையடுத்து அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 4 பேரையும் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எண்ணூர் பகுதிகளில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சத்தியவாணி முத்து நகர் பகுதி தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்