தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் முக கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) முதல் முககவசம் அணியாமல் வெளியில் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Update: 2020-04-21 23:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், ஆஸ்பத்திரி பிரதிநிதிகள் பங்கேற்ற மாவட்ட நெருக்கடி கால நடவடிக்கை குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள், கால்நடை தீவனங்கள் உள்ளிட்டவை கொண்டு வர ஏதேனும் சிரமங்கள் உள்ளதா? என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருந்த தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 20-ந் தேதிக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர வேறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கபட்டு உள்ளது. அதேபோன்று தீப்பெட்டி தொழிற்சாலைகள் குறைந்த அளவு பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு காலத்தில் காய்கறிகள், மாட்டு தீவனங்கள், மக்காச்சோளம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அபராதம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள், முதியோர் அவசர கால உதவிக்கு அவசர கால ஊர்தி இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் நாளை (அதாவது இன்று) முதல் முககவசம் அணியாதவர்களை தீவிரமாக கண்காணித்து எச்சரிக்கை விடப்படும். அதன் பின்னரும் முககவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் ஏதும் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்கலாம். ஏற்கனவே கொரோனா தொற்று நோய் பரவால் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் பல்வேறு இடங்களில் வைக்கபட்டு உள்ளது. பயிர் காப்பீடு தொகை பெற தகுதி இருந்து கிடைக்காத விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் சமூக இடைவெளியை பின்பற்றி வாகனத்தில் ஏற்றி செல்ல வேண்டும். பணிகளின்போது சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்றி பணியாற்ற அறிவுறுத்த வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 134 நடமாடும் காய்கறி அங்காடி வாகனம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இதனை முழுமையயாக பயன்படுத்தி கொண்டு தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு காலத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்(வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் திருவாசகமணி, இணை இயக்குநர்கள் முகைதீன்(வேளாண்மை), சந்திரா (மீன்வளத்துறை), சத்யநாராயணன் (கால்நடை பராமரிப்புத்துறை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், எம்பவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்