கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் வீடு திரும்பினர் - ஆம்பூரில் கலெக்டர் பழக்கூடை வழங்கி அனுப்பி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு, ஆம்பூரில் கலெக்டர் பழக்கூடை வழங்கி அனுப்பி வைத்தார்.

Update: 2020-04-21 22:15 GMT
ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் சிகிச்சை பெற்ற 5 பேர் குணமடைந்து நேற்று மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், அ.செ. வில்வநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் வரவேற்று, மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தனர். அவர்களுக்கு பழக்கூடை வழங்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, போலீஸ் துணை சூப்பிரண்டு சச்சிதானந்தம், தாசில்தார் செண்பகவல்லி, நகராட்சி ஆணையாளர் த. சவுந்திரராஜன், தொழிலதிபர் மொஹிபுல்லா, தோல் தொழிற்சாலை பொது மேலாளர்கள் பிர்தோஸ் கே.அஹமத், யூ.தமீம் அஹமத் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது கலெக்டர் சிவன்அருள் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேரில் 5 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் நலமாக உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தொடரும். ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய நகரங்களில் இயங்கும் வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும். தொழில் அதிபர்களின் வேண்டுகோளின் படி அவர்கள் சம்பளம் வழங்குவதற்கான பணிகளுக்காக சம்பந்தப்பட்ட வங்கிகளில் பணம் எடுக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு விரைவில் தொடங்க உள்ளது. முஸ்லிம்களுக்கு தேவையான அரிசி, பழங்கள், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அவரவர் வீடுகளில் கிடைக்க செய்வதற்காக ஆலோசனை செய்யப்படும். தோல், காலணி தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கண்டிப்பாக கிடைக்கும். ரம்ஜான் போனஸ் கிடைக்கும். தொழிற்சாலை நிர்வாகங்கள் அவர்களுக்கும் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல் வாணியம்பாடி ஜீவாநகர் கோட்டை பகுதியில் இருந்து 2 பேரும், வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்பால் வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றனர். அவர்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி, வாணியம்பாடி தாசில்தார் சிவபிரகாசம், நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, கிராம நிர்வாக அலுவலர்கள் சற்குணகுமார், திலீப், நீலமணிகண்டன், விநாயகம், தீனதாயளன் ஆகியோர் பழங்களை கொடுத்து வரவேற்றனர். கொரோனா பாதித்தவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்ற கட்டுப்பாடுகளை டாக்டர் பசுபதி கூறினார்.

மேலும் செய்திகள்