மதுரையில் இருந்து தேனிக்கு பயணம்: தங்கையை அழைத்து செல்ல 80 கி.மீ. சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர் - கொரோனா பயத்தை வென்ற பாசம்

தனது தங்கையை அழைத்து செல்வதற்காக, மதுரையில் இருந்து தேனிக்கு கல்லூரி மாணவர் ஒருவர் 80 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வந்தார். கொரோனா பயத்தை பாசம் வென்றது.

Update: 2020-04-21 22:00 GMT
தேனி, 

மதுரை கூடல்நகரை சேர்ந்தவர் முத்து. அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஜீவராஜ் என்ற மகனும், பிரவீனா என்ற மகளும் உள்ளனர். இதில் ஜீவராஜ், மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். பிரவீனா தேனியில் உள்ள ஒரு கண் மருத்துவமனையுடன் இணைந்த செவிலியர் கல்லூரியில் தங்கி டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக ஜீவராஜ் தனது தாயுடன் வீட்டில் வசித்து வந்தார். மேலும் கல்லூரியில் தங்கியுள்ள பிரவீனாவிடம் அவருடைய அண்ணனும், தாயும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தனது தங்கை தேனியில் இருப்பதை எண்ணி ஜீவராஜிக்கு பயம் ஏற்பட்டது. மேலும் அவருடைய தாயாரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து எப்படியாவது தனது தங்கையை மதுரைக்கு அழைத்து வர வேண்டும் என்று ஜீவராஜ் முடிவு செய்தார்.

ஏழ்மை நிலையில் குடும்பம் உள்ளதால் வாடகை கார் பிடித்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால், அவர் தனது பழைய சைக்கிளில் தேனிக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி ஜீவராஜ் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் இருந்து சைக்கிளில் தேனிக்கு புறப்பட்டார். சைக்கிளில் சென்றதால் போலீசாரும் அவரை வழிமறிக்கவில்லை. இதனால், சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து தேனிக்கு நேற்று முன்தினம் மாலையில் வந்து சேர்ந்தார்.

பின்னர் தனது தங்கை தங்கியிருக்கும் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தார். அண்ணனை பார்த்த மகிழ்ச்சியில் பிரவீனா தேம்பி அழத் தொடங்கி விட்டார். இதையடுத்து அவர்கள் ஒரே சைக்கிளில் மீண்டும் மதுரைக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால், சைக்கிளில் திரும்பி சென்றால் இடையில் போலீசார் பிடித்து விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு எழுந்தது.

இதற்கிடையே ஜீவராஜ் தேனிக்கு சைக்கிளில் சென்றது குறித்து தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் 2 பேரிடமும் விசாரித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் தேனியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், ஜீவராஜ் மற்றும் பிரவீனா மதுரைக்கு திரும்பி செல்வதற்கு கார் ஏற்பாடு செய்தனர்.

அதன்படி அண்ணன், தங்கை 2 பேரையும் அந்த காரில் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைத்தனர். ஜீவராஜ் வந்த சைக்கிள், தேனி போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு சைக்கிளை வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்