வடபொன்பரப்பியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - கலெக்டர் கிரண்குராலா ஆய்வு

வடபொன்பரப்பியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-04-22 07:05 GMT
மூங்கில்துறைப்பட்டு,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வடபொன் பரப்பி பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராத வகையில் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வீட்டிற்கே சென்று நேரடியாக வழங்க வேண்டும். ஒரு சில கடைகள் மட்டுமே இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொருட்கள் வாங்க வரும்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அப்போது சங்கராபுரம் தாசில்தார் நடராஜன், வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், கொரோனா வைரஸ் தடுப்பு மேற்பார்வையாளர் ராஜராஜன், சுகாதார ஆய்வாளர் பாசில் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்