உடுமலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு - 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

உடுமலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இதில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-04-23 23:45 GMT
உடுமலை, 

டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு உடுமலையில் இருந்து சென்று வந்த 10 பேர் கடந்த 3-ந்தேதி உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் 3 பேரும் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், 3 பேரில் ஒருவருடைய மனைவி மற்றும் மகள் ஆகிய 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களும் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் உடுமலை அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவர் கடந்த வாரம் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உடுமலையில் இருந்து முதலில் கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த 3 பேரும் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர். இருப்பினும் அவர்கள் 3 பேரும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேரில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மற்றொருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதாகக் கண்டறியப்பட்டதால் அவர் நேற்று முன்தினம் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் உடுமலையில் அவர் குடியிருந்து வந்த வீதி நேற்று அடைக்கப்பட்டு அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவரையும் சேர்த்து உடுமலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி கோவையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 3 ஆண்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நர்சு உள்பட 3 பெண்களும், ஒரு ஆணும் என 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடுமலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் குடியிருந்து வந்த பகுதிகள் அடைக்கப்பட்டு, அங்கு குடியிருப்பவர்கள் அந்த பகுதிக்குள்ளேயே இருக்கும்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்