அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-04-24 22:45 GMT
வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு, அவற்றின் விலை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கற்பகம் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் திருகுண அய்யப்பத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசுகையில், “கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வேலூர் மாவட்ட மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகைப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். 

மேலும் அனைத்து பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. மாவட்டம் முழுவதும் ஒரே விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக மாவட்டம் முழுவதும் உள்ள உணவுப்பொருட்களின் கையிருப்பு மற்றும் விலை நிலவரத்தை கலெக்டர் கேட்டறிந்தார். இதில், வேளாண்துறை அலுவலர்கள், வியாபாரிகள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள், துறைசார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்