நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் 90 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் 90 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2020-04-26 23:30 GMT
பள்ளிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையத்தில் ஊரடங்கால் அவதிப்படும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் ரூ.500 மதிப்பில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த உணவு பொருட்கள் தொகுப்பு ரூ.500-க்கு வழங்கும் திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தினந்தோறும் பொதுமக்களுக்கு கூறி வருகிறார். அரசின் நடவடிக்கையால் கொரோனா பாதித்தவர்களை விட சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் 90 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது, பாப்பநாயக்கன்பட்டியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கனமழையால் நிலத்தடி வழியாக செல்லும் மின்கம்பிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்