சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் ஊட்டி ரெயில் நிலையம்

சுற்றுலா பயணிகள் வராததால், ஊட்டி ரெயில் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது.

Update: 2020-04-27 01:04 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இந்த சீசனை அனுபவிக்கவும், சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைப்பதாலும் கோடை வாசஸ்தலமான ஊட்டிக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். ஊட்டி-குன்னூர், ஊட்டி-மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் மலை ரெயில் இயக்கப்படுகிறது.

அதில் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்த படி பயணம் செய்வது புதிய அனுபவமாக இருக்கும். சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து, பலர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஊட்டி-கேத்தி இடையே ஜாய் ரைடு என்ற பெயரில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால், மலை ரெயிலில் பயணிக்க ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

மலை ரெயில் போக்குவரத்து ரத்து

அப்போது பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்வது உண்டு. கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ரெயில் நிலையத்தில் உள்ள அருங்காட்சியகம், இருக்கைகள், காட்சிக்கு வைக்கப்பட்ட நீராவி என்ஜின், நடைபாதை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படவில்லை.

கோடை சீசன் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலை ரெயில்களில் பயணம் செய்வார்கள். குகைகளை கடந்து செல்லும் ரெயிலில் ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும் என்று மனதில் ஆசை எழும்பும். ஊட்டி மலை ரெயில் சுற்றுலா பயணிகளுக்காகவே இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளதாலும், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் லட்சக்கணக்கில் ரெயில்வே துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்