4 நாட்கள் முழு ஊரடங்கு: கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வாகனங்கள் செல்ல தடை

சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-27 02:57 GMT
மூணாறு,

கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு பாராட்டு

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, சேலம், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் 4 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சட்டவிரோதமாக நுழைபவர்களை பிடித்து கொரோனா மையத்தில் சேர்த்து நடவடிக்கை எடுத்து வருவதற்கு மத்திய அரசு பாராட்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக கேரளா இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா அதிகம் பாதிப்பில்லாத மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் சிறிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு முக கவசம் அணிந்து 5 பேர் மட்டும் பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை

மாநிலம் முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகையாளர்கள் பணி செய்ய பாதுகாப்பு வழங்கப்படும்.

சுகாதாரத்துறையினரின் அறிவுரைகள்படி வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வராமல் இருக்கவேண்டும். அத்தியாவசியப்பொருட்களுக்கு மாநிலத்தில் தட்டுப்பாடு ஏற்படாது. தமிழ்நாட்டில் இருந்து நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 580 சரக்கு வாகனங்கள் மூலம் உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்